Tuesday 20 January 2015

நீ இருக்கும் வரை நானிருப்பேன்

              நேற்றிருந்தேன் இன்றிருந்தேன் நாளை நானில்லை
நின்று சுழல் பூமிகொண்ட நிழலு மங்கில்லை
தோற்றவனாய் திரும்புவதே ஈற்றில் என்னிலை
தூய்மைகொண்டே தூரத் தெரியும் தீயென் சக்தியை
நீற்றென உடலாக்கிய பின் நேரும் நற்சுகம்.
நிர்மலவிண் நீந்துகையில் நினைத்துப் பார்இதை
நாற்றம் கொண்டிட தேகமிட்டவள் ஊற்றித் தீயினை
நாளதில் நெருப்பாக்கிட நான் நீங்குவேன் உனை

சேற்றெனும் மணல் கொண்டுசெய்யுடல் சிந்தனைதனை 
 சீரழித்திடும் யாக்கை என்கிற தீமையுமில்லை
போற்றிட விண்ணில் போவதி லெந்தப் புதுமையும் இலை
 பூத்துக்கொண்ட இப்பொய்யுடல் விட்ட போது இன்நிலை 
ஏற்றிடுமவள் ஈற்றினிலெமை கொள்ளும் நாள்வரை
 இவ்வுலகினில் காண்பது மெய்யுணர்வின் பொய்நிலை
சீற்றம் கொள்ளுணர் ஆற்றலுமற்ற பேய்களின்நிலை
சிந்தி இந்நிலம் தந்தபின்கொள்ளும் குருதிக்கூட்டினை

காற்றினைக் கொண்டு ஊதிய இக்காமப் பையினை
கட்புலனொடு காட்சி விம்பமும் ஏற்றும் காதலை 
வேற்று எண்ணங்கள் வேண்டி மெய்யினில் ஆக்கும்வேட்கையை
விட்டொரு விதம் வெளியில்சென்றிட விரும்பினாலுனை
ஆற்றென அகமோடி கண்டந்த அன்புச்சோதியை
ஆக்கிடும் அகவேதனை தரும் நெஞ்சத்தோசையை
கூற்றென மெய்யைக் கூறின் யாக்கை தீயில் போம்வரை
கூடி உன்னுடன் நான் இருப்பது திண்ணம் வேறில்லை

No comments:

Post a Comment