Tuesday 20 January 2015

அருள்வாயே!


நிறைமதி முழுதென நினைவுகள் பெருகிடும்
நிலைதனை நிதமெழ அருள்தாயே
குறை மனதிடை இல கொடிதெனும் பிணிகெடு
குவலயம் மலர் என மடிதூங்க
மறை துயர், மகிழ்வெனும் மணியொலி நிதமெழ
மருவிய சுகமென மனமீதில்
இறை மழை எனஅருள் இலங்கிட மதி திறன்
இயல்பெழ நிறையன்பு தருவாயே

கருணையில் பெரிதென கரமெடு அருளென
கவலைகள் பொடிபட உடைதாயே 
வருவன வளம்மிகு தமிழுடன் இனிகவி
வரமிது எனஅளி இனிதாயே     
தரும் பொழுதினி லவை தவறிடும் வகையின்றித்
தகைமிக உடையவன் எனமாற
ஒருமையில்  துணிவெழ இயற்கையில் உரம் பெற
எனை நினதொளி தந்து அருள்வாயே

இருள் பல அறிவனென்  இரந்திடு நிலையெனும்
இரவுகள் இனியெனும் இலதாக
துருப்பிடி இரும்பெனும் துரும்பெனும் இழிவதும்
தொடஎன விடுநிலை அறுத்தெயென்
குருவென அறிவதைக் கொடு உளம் தெளிவுற
குருதியின் கொதி சினம் குறைவாக்கி
‘மெருகிடு மனமதை மகிழ்வுற தணிவெனும்
மிருதிடு மனம் கனிந்தெனை நீ`யே !

No comments:

Post a Comment