Monday 9 February 2015

எங்கள் தேசம் என்று மாறுமோ?

நீரெழுதும் சித்திரமோ நிழல்வரைந்த ஓவியமோ
நெஞ்சங் காணும் வாழ்வழிந்து போகுதே
ஊரெழுந்தே ஓடியதும் உறவு கண்ட தாழ்நிலையும்
உற்ற துயர் நீக்கமின்றிக் காணுதே
ஏரெடுத்து நிலம் உழுது இன்பங்கொண்டு வாழ்ந்தவர் கை
ஏந்தி வாழும் இன்னல் நிலையானதே
பேரெடுத்த வீரர்தமிழ் பேசும் பலகாவியங்கள்
பேணுந்தமிழ் மாந்தர் நிலை மாறலேன்
மாரடித்துஅழுதுமென்ன மாதர் குலம் கதறியென்ன
மானம்தன்னை இன்னல் கொண்டுபோகுதே
யாரடித்துப் போவதெனும் நீதியற்ற கூட்டத்திலே
யாருமற்றவன் நிலைபோ லானதே
வேரடிக்கு வீழ்ந்த மரம் விலங்கடித்து போட்ட உடல்
வேட்கை கொண்டு சுற்றும் ராஜ பட்சிகள்
கூரெடுத்த பார்வையிலே கொள்ளும் உணவாக எங்கள்
குலம் இருக்க விட்ட நீதி கொள்ளவோ
சீரெடுத்த பழமைமொழி செம்மொழியென்றாகுந் தமிழ்
சிதையுதொரு பக்கம் கண்கள் மூடவா
நீரெடுத்த விழி சிவந்து நிற்குதொரு குலமுணர்ந்து
நிம்மதியை காணும் எண்ணம் தேய்வதா
தேரெடுத்தும் ஓடி நிலம் தீரம்கொண்டு மீட்டகதை
தேறியும் கிடக்கும் சங்கநூலிலே
ஊரையும் ஏமாற்றித் தமிழ் உள்ளங் கோழையாக்கி நலம்
உள்ள பக்கம் சாயும் இந்த உலகமே
நான் நடந்தால் மென்மலர்கள் நீ நடந்தால் செந்தணல்கொள்
நேர்மையிதே நீதியென்றே கூறுவர்
தேன் சுரந்த பூஎனக்கு சீழ்வடியும் புண்ணுனக்கு
தீர்வு இதோ கொள்ளென்றன்பை ஓதுவர்
வான் எடுதத வண்ணம் புகழ் வாய்த்து மலை ஏறுகையில்
வாரிக்காலை கீழ்விழுத்தி ஆடுவர்
கோன் பிடித்த கோலில் கறை குருதி பட்ட வேளை அதை
குற்றமில்செங் கோலென்றுண்மை மூடுவர்
ஆனதென்ன நீதியெங்கே ஆகும் வீரத்தோளுமெங்கே
ஆட்சிசெய்த மன்னர் கதையான தின்றே
மானம்காக்க மங்கையரும் மஞ்சள்பூசி பொன்னிலவில்
மன்னர்வீர மார்பில் சாய்ந்த நாளுமெங்கே
தேனை மாந்தி கொள்வதென தீந்தமிழில் பாடிநடம்
தெய்வ கோவில் மண்டபங்கள் காண்பதென்றோ
ஆனை படை கொத்தளங்கள் அரச பரிவாரமென்றே
அன்னைதமிழ்த் தேசம்,ஆகும் நாளுமென்றோ ?
Like ·

No comments:

Post a Comment